சென்னை,
சட்டசபை தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில் செல்வன் 11,417 வாக்குகள் வித்தியாசத்தில் - வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவரது வெற்றியை எதிர்த்து வாசு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில்செல்வனும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக வாசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கு திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தேர்தல் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மனுவைத் திரும்பப் பெற முன்வந்ததால், ஆட்சேபனைகள் தெரிவிக்கவோ, வேறு யாரேனும் வழக்கு தொடரவோ ஐகோர்ட்டு 15 நாட்கள் அவகாசம் வழங்குவது வழக்கம். செந்தில்வேலன் வெற்றிக்கு எதிராக ஆட்சேபனையோ, தேர்தல் வழக்கோ தொடர யாரும் முன்வராததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.