தமிழக செய்திகள்

குடும்பத்தினருக்குத் தெரியாமல் 13 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு!

பள்ளிகுப்பம் பூமலை முருகன் கோவிலுக்குச் சென்று இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

வேலூர்,

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே 13 வயது சிறுமியைத் திருமணம் செய்ததாகக் கூறப்படும் 26 வயது டிராக்டர் ஓட்டுநர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் திருமணம் செய்ததாகப் புகார்

பிராமணமங்கலம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிக்குச் சென்று வந்த 13 வயது சிறுமியுடன் கடந்த ஓராண்டாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி காலை, இருவரும் தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிகுப்பம் பூமலை முருகன் கோவிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்குத் தகவல்

இதுகுறித்து தகவலறிந்த அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அணைக்கட்டு வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கீதா, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாலிபர் மீது வழக்குப்பதிவு

புகாரின் அடிப்படையில், சிறுமியையும் சம்பந்தப்பட்ட இளைஞரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, 26 வயது இளைஞர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சிறுமி

13 வயது சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரைக் காட்பாடி அருகே செயல்பட்டு வரும் அன்னை சத்யா குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT