தமிழக செய்திகள்

துணை சபாநாயகர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை

விசாரணை அதிகாரி இல்லாததால் விசாரணை தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

மதுரை,

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 45), குடிநீர் பிரச்சினை தொடர்பாக சட்டமன்ற துணை சபாநாயகர் ரவி சங்கரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தன்னைத் தாக்கியதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மண்ணச்சநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், போலீசார் தன்னை மிரட்டி வீடியோ எடுத்ததாக கார்த்திக்குமார் மீண்டும் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்திக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணை அதிகாரி இல்லாததால் விசாரணை தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வக்கீல் பொன் முருகேசன் கூறுகையில் 'எனது கட்சிக்காரரை போலீசார் வேண்டும் என்றே அலைக்கழித்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இதுபோன்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்து விட்டுதான் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்ப வேண்டும். ஆனால் போலீசார் அதனை பின்பற்றவில்லை.

எனவே துணை சபாநாயகர் மீதும், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்' என்றார்.

SCROLL FOR NEXT