தமிழக செய்திகள்

கூடலூர் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் மீது வழக்கு

ஒரு மருந்து கடையின் பின்புறம் நோயாளிகளுக்கு ஒரு பெண் ஊசி போட்டு மருத்துவம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணியில் மருத்துவம் படிக்காமல் பெண் ஒருவர் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் நசுருதீன் மற்றும் மருத்துவ குழுவினர் நாடு காணி பஜாரில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒரு மருந்து கடையின் பின்புறம் நோயாளிகளுக்கு ஒரு பெண் ஊசி போட்டு மருத்துவம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் குழு சோதனை நடத்தியதில், நோயாளிக ளுக்கு சிகிச்சை அளித்ததற்கான தடயங்கள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது நர்சிங் படித்து விட்டு சிகிச்சை அளிப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பாக அவரது படிப்பு சம்பந்தமான சான்றிதழை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவம் படிக்காமல் போலி சான்றிதழை வைத்து, நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவத்துறையினர் தேவாலா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அம்மு குட்டி (வயது 66) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.