சென்னை,
சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழை பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் விண்ணப்பிக்கும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழை பெறும் வகையில், சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கும் படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்நருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.