தமிழக செய்திகள்

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு; அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிற்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சொந்தமாக 18 சொத்துக்களை முடக்கம் செய்தது.இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமலாக்கத் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், ஒரே ஒரு சொத்தை தவிர, மீதமுள்ள 17 சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி, அதை விடுவித்து கடந்த 2025-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அமலாக்த்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், 17 சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதற்கான காரணத்தை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கூறவில்லை என்று கூறியிருந்தது.இந்த வழக்கிற்கு அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.