தமிழக செய்திகள்

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பை, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டிருந்தார்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம்

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை-பட்டினப்பாக்கத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த சூழலில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி செப். 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தலைமை செயலகம் அமையவுள்ள பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தி.மு.க.

முன்னதாக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து எந்த குறிப்பும் இல்லை.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், அந்தப் பகுதியில் உள்ள ஒன்பது மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடலோர ஒழுங்கு முறை மண்டல பகுதியான பட்டினப்பாக்கத்தில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது. இந்த பகுதி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை தன்னிச்சையானது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT