தமிழக செய்திகள்

ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் வழக்கு; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இச்சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்

ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குடிசை மாற்று வாரியம் அருகே முடுக்குத்தரவை செல்லும் சாலையில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் நின்றிருந்தனர், உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.

பையில் தங்கக்கட்டிகள்

உடனே 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதித்தபோது தங்கக்கட்டிகளும், தங்க நகைகளும், கட்டுக்கட்டாக பணமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், எம்.ஜி.ஆர். நகர் அருகே குப்பை கிடங்கு வழியாக நடந்து வந்தபோது அங்கு கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் இருந்ததை பார்த்தோம். அவற்றை சமமாக பங்கிட்டு கொள்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத முடுக்குத்தரவை செல்லும் ரோட்டில் உள்ள இந்த பகுதிக்கு வந்ததாக கூறினர்.

ரூ.5 கோடி

தங்கம், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 3 1/4 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் நகைகள், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பிடிபட்டு இருந்தது. அதாவது இந்த நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என தெரியவந்தது.

சிக்கியவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 45), செல்வராஜ் (62), பாலுகுட்டி என்ற சரவணன் (50), மாரிமுத்து (27), வேலாயுதம் (40) என்று தெரியவந்தது.

விசாரணை

இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் ஆகியவற்றை இவர்களுக்கு கொடுத்தது யார்? எங்கேயும் கொள்ளையடித்து வந்தார்களா? அல்லது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் பையுடன் தூக்கி வீசிச்சென்றதில் சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் 5 பேரிடமும் விசாரணை நடந்து வந்தது.

இந்த சம்பவத்தில், கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் ரொக்கம் ஆகியவை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தங்கத்தில் முறைகேடு

குப்பையில் பை கிடைத்ததாக 5 பேர் கூறிய நிலையில், கைப்பற்றப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இச்சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்படவுள்ளது.

SCROLL FOR NEXT