சென்னை,
பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “என் மீது பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அதாவது அந்த பெண்ணை மோசடி செய்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. அதில் உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலும், அரசு தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள், பெண்ணின் படத்தை தவறாக சித்தரித்த இந்த விவகாரம் தீவிரமானது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து இருந்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இந்த நிலையில் மனுதாரர் மீதான வழக்கில் சட்டப்படி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி முரளிசங்கர் நேற்று தீர்ப்பளித்தார்.