விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேல் மற்றும் பவானி. இவர்களது மகள் ஹேமலதா (வயது 6). கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ஹேமலதா திடீரென காணாமல் போனார். சிறுமியைக் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, காவல்துறையினர் தீவிரமாகத் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றுடன் 34 நாட்கள் கடந்தும் சிறுமி குறித்த எந்தவொரு தடயமோ, ஆதாரமோ கிடைக்கவில்லை.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
“இன்று செஞ்சியில் காணாமல் போன சிறுமி ஹேமலதாவின் இல்லத்திற்குச் சென்று, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று, பரிதவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம், முதல்-அமைச்சரே?
பெற்ற பிள்ளை எங்கே என்று தெரியாமல் 35 நாட்களாகத் தவிக்கும் இந்தத் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.