தமிழக செய்திகள்

சகோதரரை தாக்கிய வழக்கு: புதுச்சேரி கோர்ட்டில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக விலக்கு

குற்றப்பத்திரிகை நகலை தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகி பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியை சேர்ந்தவர் நெஸ்தோர். இவரது மகன்கள் மரிய குளோத் (வயது 47) மரிய வில்சன் (வயது 44). இதில் மரிய வில்சன் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார்.

கொலை மிரட்டல்

முன்னதாக மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 8.8.2022-ந் தேதிஅன்று மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுவை 'எழில் நகரில் உள்ள மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இது குறித்து கேர்லின் குளோத் புதுவையில் உள்ள லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன், நெஸ்தோர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மரிய வில்சன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

விசாரணை

இந்த குற்றப்பத்திரிகை நகலை தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகி பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த சனிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாத நிலையில் நாளை (ஜூலை 10ம் தேதி) ஆஜராக புதுச்சேரி கோர்ட்டு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

சமரச தீர்வு மையம்

இந்நிலையில் புதுச்சேரி கோர்ட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 10ம் தேதி) ஆஜராவதில் இருந்து சென்னை ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது .

சொத்து தகராறில் சகோதரர், அவரது மனைவியை தாக்கியதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது பதியப்பட்ட குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் வரும் 13 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.