தமிழக செய்திகள்

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான சகோதரரை தாக்கிய வழக்கு: இன்றும் சமரசம் எட்டப்படவில்லை

சொத்து தகராறு வழக்கில் சமரச தீர்வு மையத்தில் 4வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் ஆஜரானார்.

சென்னை,

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான அவரது சகோதரரை தாக்கிய வழக்கில் இன்றும் சமரசம் எட்டப்படாததால் 5வது முறையாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்தையும், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது‌. புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்டபோதும், மரிய வில்சன் தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சமரச தீர்வு மையம்

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பிலும் சமாதானம் செய்ய தயாராக இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டது.

சமரசம் எட்டப்படவில்லை

நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த ஜூலை 13ம் தேதி இரு தரப்பிலும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் ஜூலை 21ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜூலை 21ம் தேதி அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் தீர்வு எட்டப்படவில்லை. அடுத்து கடந்த ஜூலை 28ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் சமரசம் எட்டப்படவில்லை. பின்னர் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

4வது முறையாக

இந்நிலையில் சொத்து தகராறு வழக்கில் சமரச தீர்வு மையத்தில் 4வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜரானார். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சமரசம் எட்டப்படவில்லை. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தை அறிக்கையை உயர்நீதிமன்றத்திக்கு அனுப்ப சமரச தீர்வு மையம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.