சென்னை ஐகோர்ட்டில், குமாரவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக கூறி மனு தாக்கல் செய்து இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் வாக்காளராக உள்ளேன். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும்போது வேட்புமனு தாக்கல் செய்தார்.அதில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறியிருந்தார். தற்போது அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 63 லட்சம் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் 11 கோடியே 6 லட்சம் ரூபாய் ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளார். 2020-ம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு வருமானம் மற்றும் சொத்துகள் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்காக உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுபோல், சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என்பதால், இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கும், கம்பெனி விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.