கள்ளக்குறிச்சி,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் பெண் கலெக்டர் ஒருவர். கடந்த மே மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட் டார். இவருக்கு கள்ளக்குறிச்சி(தனி) த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் (வயது 36), தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக கலெக்டரின் கணவரான ஷேக் அப்துல்ரஹ்மான் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே எம்.எல்.ஏ.,அருள்விக்னேஷ் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வைரலானது.
அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள் ளிட்ட அரசியல் கட்சியினர் அவரை கைது செய்து, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இருப்பினும் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு அதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை எனவும், மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக புகார் அளிக்கவில்லை எனவும் தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வும் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். அதே சமயம், கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கடந்த 15-ந்தேதி கையில் எடுத்து, நியாயமான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணையை டி.ஜி.பி. நடத்த வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதற்கிடையே கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி., கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க. வக்கீல் திரி சூலு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளை கேட்டு நாளை(அதாவது நேற்று)விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் நேரில் சென்றார். எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அவர், மாவட்ட கலெக்டரிடமிருந்து புகாரை எழுத்துப்பூர்வமாக பெற்றார்.
பின்னர் அந்த புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் கள்ளக் குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் விவரம் வருமாறு:-
1. பி.என்.எஸ். சட்டப்பிரிவு 75 (1) (i) r/w 75 (2) விருப்பத்துக்கு மாறாக பாலியல் ரீதியான அணுகுமுறை, பாலி யல் நோக்கத்துடன் அத்துமீறி நடந்து கொள்ளுதல். (இந்த சட்டப்பிரிவுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.)
2. சட்டப்பிரிவு 75 (1) (iv) r/w 75 (3) பாலியல் நோக்கத்துடன் இரட்டை அர்த்தத்தில் பேசுதல், பாலியல் சாயல் கொண்ட ஆபாசமான கருத்துகளை தெரிவித்தல். (இந்த பிரிவுக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.)
3. சட்டப்பிரிவு 78 (2) பெண்ணின் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய் தல் (இந்த பிரிவுக்கு முதல் முறை குற்றத்திற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம், 2-வது அல்லது அதற்கு மேற்பட்ட முறை குற்றத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்).
4. சட்டப்பிரிவு 132- அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்
(இப்பிரிவுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.)
5. சட்டப்பிரிவு டி.என்.டபிள்யு.எச்.ஏ. 4- தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம் (இந்த பிரிவுக்கு அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்).
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன், கள்ளக்குறிச்சி தனிப்படை போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் நேற்று காலை 10.30 மணியளவில் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. வீட்டிற்கு சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் அருள்விக் னேஷ் எம்.எல்.ஏ. மாடி வீட்டில் உள்ள தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே மதியம் 12 மணியளவில் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கலெக்டர் வீடு மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கலெக்டரின் உதவியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர், 4 கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் நேற்று மாலை 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இவர்களி டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் இரவு 7 மணிக்கு அனைவரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்வதற்கான நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், அதற்கான முழு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வசித்து வருபவர் அருள்விக்னேஷ் (வயது 36). இவர் 9.5.1990 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னையா-லட்சுமி ஆவார்கள். இவருக்கு திருமணமாகி சிவசங்கரி என்ற மனைவியும், ரவீணாஸ்ரீ(3) என்ற பெண் குழந்தையும் உள்ளது. எம்.எஸ்சி. படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் புல்வெளி கிரிக்கெட் மைதானம் அமைத்து நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருள்விக்னேசுக்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட அருள்விக்னேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பா ளர் ராஜீவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று பணியாற்றி வந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு. அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்ப பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அந்த செல்போனை சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.