தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு: சேகர்பாபு மீது வழக்குப்பதிவு

முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை,

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT