தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மோசடி செய்ததாக வழக்கு: பி.டி.அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் சோதனை

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.டி. அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

குற்றப்பிரிவு போலீசார்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆட்கொணர்வு மனு

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பி.டி.அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குண்டர் சட்டம் ரத்து

இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 23-ம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பி.டி.அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT