சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்து வருகிறோம். பட்டாசு விற்பனைக்கு எங்களது சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டு எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீவுத் திடலில் இடம் ஒதுக்கப்பட்டது. தீவுத் திடலை தற்போது பஸ் நிலையமாக பயன்படுத்தி வருவதால் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனைக்காக எங்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், “பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி ஒவ்வொரு ஆண்டும் ஐகோர்ட்டை நாட வேண்டியுள்ளது” என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், “இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக விரைவில் டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு குறித்து சுற்றுலாத்துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர். பொது மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.