கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

‘விவசாயி’ சின்னத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரி ஜனதா கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சிக்கு 'விவசாயி' சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் உழவன் சின்னம் போல காட்சியளிக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரி ஜனதா கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய கட்சியான ஜனதா கட்சி 1977-ம் ஆண்டு முதல் ஏர் உழவன் சின்னத்தை பயன்படுத்தி வந்துள்ளது. தங்கள் சின்னத்தைப் போல நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், ஜனதா கட்சி தற்போது அங்கீகாரத்தை இழந்து விட்டதால், ஏர் உழவன் சின்னத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதை வலியுறுத்தி உத்தரவு பிறபித்துள்ளது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனதா கட்சிக்கு ஏர் உழவன் சின்னத்தையும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மனுதாரர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யவில்லை எனவும், ஏற்கனவே அங்கீகாரத்தை இழந்த கட்சிக்கு சின்னத்தை தக்க வைக்க உரிமையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் சுட்டிக்காட்டி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.