சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பரமசிவம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளில் த.வெ.க. நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சித் தலைவரான முதல்-அமைச்சர் விஜய்யை முன்னிலைப்படுத்துகின்றனர். விஜய் அண்ணா, விஜய் மாமா என்று மாணவர்களை கோஷம் போட வைக்கின்றனர்.
தேசிய தலைவர்களின் புகைப்படத்துடன் விஜய் படத்தையும் காட்சிப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல கல்வி நிறுவனங்களில் விஜய்யின் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன. மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் இந்த சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரச களுக்கும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார்கள் அனுப்பியுள்ளேன்.
எனவே, கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதுகு றித்து விதிமுறைகளை உருவாக்கவேண்டும். இதுபோன்ற அரசி யல் நிகழ்ச்சிகளை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களின் அதி காரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்துக்காக ஏன் இத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.