கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோவில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதாக கூறி சிறப்பு கட்டண தரிசன முறையை அறநிலையத்துறை அமல்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சொக்கலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதாக கூறி சிறப்பு கட்டண தரிசன முறையை அறநிலையத்துறை அமல்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், பால்குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், கவர்னர், முதல்-அமைச்சர், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனம் அனுமதிக்கலாம். ஆனால் பணத்தின் அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டும் விதமாக சிறப்பு தரிசனத்தை அமல்படுத்த முடியாது. எனவே சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.