சென்னை:
தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிடும் நிலை ஏற்படும் என்றும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமையை மீறுவதாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் பயனாளிகளுக்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடியை அரசு ஏற்கும் நிலையில், தனியார் பஸ்களுக்கும் இதேபோன்று இழப்பீடு வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதை அரசு ஏற்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டசபையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், எனவே வெற்றிப் பயண திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். வழக்கு முடியும் வரை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், “மனுதாரர் ஈரோட்டில் 2 வழித்தடங்களில் மட்டுமே பஸ்களை இயக்கும் தனியார் பஸ் உரிமையாளர். அவர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.