தமிழக செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 918 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட் டன. இந்த 4 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 918 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 2.365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டனர்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இதுசம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், 39 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் என சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வேட்புமனுவில், 70 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் என ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதுகுறித்த விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிடக் கோரி தொகுதி வாக்காளர் செந்தில்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 2021ல் அசையும் சொத்துக்கள் 12 லட்சத்து 8 ஆயிரத்து 409 ரூபாயாகவும், அது தற்போது 60 லட்சத்து 64 ஆயிரத்து 152 ரூபாயாக உயர்ந்துள்ளது; ஐந்தாண்டு கால எம்.எல்.ஏ. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பின் அளவு அபரிமிதமாக இருக்கும் நிலையில், அதற்கான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை; ஆண்டு வருமானம் 8 லட்சத்து 68 ஆயிரத்து 780 ரூபாய் என 2021ல் குறிப்பிட்டிருந்த நிலையில் சொத்துக்களின் அதிகரிப்பு விகிதம் என்பது நியாயப்படுத்தக்கூடிய வகையில் இல்லை எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான இந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.