மாணிக்கம் தாகூர் 
தமிழக செய்திகள்

கடந்த ஆட்சியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து..! - மாணிக்கம் தாகூர் வரவேற்பு

இந்த அரசாணை, உழவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் கிடைத்த வெற்றி என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த ஆட்சியில், (மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை) அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் வரவேற்பு

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை) தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் குரலுக்குச் செவிசாய்க்காமல், அவர்களை ஒடுக்கும் நோக்கில் வழக்குகள் பதியப்பட்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உழைக்கும் மக்களுக்கும் அறிவொளி ஊட்டும் ஆசிரியர்களுக்கும் எதிரான திமுகவின் அந்த அணுகுமுறையை மாற்றி, தற்போது அவ்வழக்குகளைத் திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை மனமார வரவேற்கிறேன்.

கடந்த 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மொத்தம் 600 வழக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் திமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

உழவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றி

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கும், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கும் காங்கிரஸ் பேரியக்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும். ஜனநாயக வழியில் போராடும் உழைக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை, உழவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT