சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதேபோல, கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலி மலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், அம்பை தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகி யோர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர். எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
இவர்களது வெற்றியை எதிர்த்தும் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் மதியழகன், சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் செல்லபாண்டியன், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட் பாளரும் தற்போது கட்சியிலிருந்து வெளியேறியுள்ள தோப்பு வெங்கடாசலம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிர்த்து அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.