சென்னை,
தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று போராட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் போராட்டத்திற்கான மேடைகள் அமைக்கும் பணியில் தி.மு.க.வினர் நேற்று ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, மேடை அமைக் கக்கூடாது என கூறினார்கள். தொடர்ந்து அனுமதியின்றி மேடை அமைக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது.
இதற்கிடையே அங்கு வந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதற்கிடையே, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததாலும், போராட்டம் நடத்த வந்தவர்களை கைது செய்ததாலும் தி.மு.க. மாணவர் அணியினர் புரசைவாக்கம் டவுட்டன் பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சருக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி, சாலை நடுவில் அமர்ந்து கோஷங் களை எழுப்பினார்கள். இதனால் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
தி.மு.க.வினர் போலீஸ் வாகனத்தின் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் தள்ளு முள்ளுக்கு இடையே அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைபோல, புரசைவாக்கத்தில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.