தமிழக செய்திகள்

மரவள்ளி கிழங்கு சீசன் முடிகிறது: ஜவ்வரிசி விலை கிடுகிடு உயர்வு

தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு சீசனில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை முடியும் நிலையில், தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதால் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.

ஜவ்வரிசி தயாரிப்புக்கு மரவள்ளி கிழங்குதான் மூலப்பொருள் என்பதால், வியாபாரிகளிடம் இருந்து ஆலை உரிமையாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். நடப்பு சீசனில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை முடியும் நிலையில், தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதால் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து, ஜவ்வரிசி தயாரிப்பாளர்கள் கூறும்போது, "தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்குள் முடிந்துவிடும். தற்போது, மரவள்ளி கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு டன் (ஆயிரம் கிலோ) ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜவ்வரிசை தயாரிப்பு குறைந்துள்ளது. இதனால் 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக விலை அதிகரித்துள்ளது. இதனால், கடைகளில் ஜவ்வரிசி சில்லறை விற்பனை விலையும் உயர்ந்துள்ளது" என்றனர்.