தூத்துக்குடி,
தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் சாதி மற்றும் மதம் குறித்த தகவல்கள் இடம்பெறக் கூடாது என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் சமூக ஊடக ரீல்ஸ் மோகத்தில் இருக்கிறார்கள். கல்வி அமைச்சர் பள்ளியிலேயே நடனமாடுகிறார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் செயல் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அமைச்சர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்யவில்லை.
தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் அவர் எந்த மாநிலத்திற்கு சாதகமாக செயல்படுவார்? மேலும், த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை அனைத்தும் வெற்று அறிக்கையாகவே உள்ளது. முந்தைய தி.மு.க. அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையிலேயே மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் சீர் வழங்கப்படும் என்று விஜய் கூறினார். ஆனால், தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்மாமன் சீர் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்குவது என்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.
வருவாய்த்துறை மாணவர்களுக்கு வழங்க உள்ள அடையாள அட்டையில் சாதி மற்றும் மதம் குறித்த விபரங்கள் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதி, மதம் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கும் அடையாள அட்டையில் இடம்பெற கூடாது. இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.