திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதிய மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்து, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி, குற்றச் செயல்கள் மற்றும் சாதிய மோதல்களை தவிர்த்து நல்வழியில் செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அகற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், குறுக்குப் பாலங்கள், கிராம நுழைவு மற்றும் வெளியேறும் பலகைகள், பொதுச் சுவர்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் சாதிய வர்ண அடையாளங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை உடனடியாக அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், இன்று 63 இடங்களில் இருந்த சாதிய குறியீட்டு அடையாளங்கள் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.