கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சாதிவாரிக் கணக்கெடுப்பு: வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு - மாணிக்கம் தாகூர்

2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சாதிவாரிக் கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட மோடி அரசு தொடர்ந்து தயங்குவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு 2015-லேயே தீர்ப்பளித்தும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் 28 சதவிகிதம் மட்டுமே வசூலான ரூபாய் 35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்து வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் (Willful Defaulters) பெயர்களை வெளியிட மறுக்கின்றன.

அதேபோல, தொகுதி மறுவரையறை காரணங்களுக்காகக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்ட மோடி அரசு, சமூக நீதி அமைச்சகம் எஸ்.சி. / ஓ.பி.சி. பட்டியல்களைத் தரத் தயாராக இருந்தும் 'பட்டியல் இல்லை' எனப் பொய் சொல்லி, சாதிவாரி கணக்கெடுப்பை முடக்க 'திறந்தவெளிக் கேள்வி' (Open-ended question) என்ற சதியை அரங்கேற்றியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதும், உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமிட்ட சதி! ஆர்.எஸ்.எஸ்.-ன் உள்நோக்கத்தை நிறைவேற்ற, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி வெறும் முகமூடியாக இருந்து, அமித்ஷாவுடன் சேர்ந்து இந்த வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்.

2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான்; அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான விவகாரம் என்பது அனைவரும் அறிந்தது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் போது, ஓ.பி.சி. சாதி விவரங்களை மட்டும் முன்பே வரையறுக்கப்பட்ட பட்டியல் இன்றி open-ended முறையில் சேகரிப்பது ஏன்?

ஒன்றிய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. சாதிகள் இருக்கும்போது, துல்லியமான பட்டியலைத் தராமல் பொதுவான கேள்வியாக வைப்பது மோடி அரசின் திட்டமிட்ட நாடகம்! 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் ஒரு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் எதுவும் இல்லாமல் தவறுகளின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது வடிகட்டிய பகல்கனவு!

ஒரு சிறிய எழுத்துப் பிழை கூட ஒரு சமுதாயத்தை வேறொரு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் பேராபத்து இதில் உள்ளது. தெளிவான Drop-down பட்டியலைத் தவிர்த்துவிட்டு இப்படி ஒரு குளறுபடியான முறையைக் கையாள்வது மொத்தக் கணக்கெடுப்பையும் படுதோல்வியிலேயே முடிக்கும்.

இது வெறும் நிர்வாகக் குளறுபடி அல்ல உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக்காட்டி, எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே அடியோடு சிதைத்துவிடும் பேராபத்து! பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாகவே முடக்கி வைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் நூற்றாண்டு கால சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக நீதி எதிர்ப்பு அஜெண்டாவைச் செயல்படுத்தும் முகமூடிகளாகத்தான் மோடியும் அமித்ஷாவும் இந்த துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

ஒரே சமூகப் பெயர் பலவித எழுத்துப் பிழைகளுடன் சிதறிப்போய், துல்லியமற்ற தரவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 69 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமையையே கேள்விக்குறியாக்கும் மோடி அரசின் ஆபத்தான சூழ்ச்சியை அம்பலப்படுத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் டி.ஏ. நவீன் ஒருங்கிணைப்பில் மாநிலம் தழுவிய களப் பிரசாரக் கலந்துரையாடல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது !

செப்டம்பர் 17 அன்று சென்னையில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் இப்பயணம், தமிழகத்தின் முக்கிய 10 நகரங்களில் விரிவான மக்கள் சந்திப்பு மற்றும் நேரடிச் செயல்விளக்கக் கலந்துரையாடல்களாக நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் முன்னிலையில், 'Open-ended' முறையினால் உருவாகும் குளறுபடிகளையும், காங்கிரஸ் முன்வைக்கும் சரிபார்க்கப்பட்ட Dropdown முறை மூலமே நம்பகமான சமூகநீதித் தரவுகளைப் பெற முடியும் என்பதையும் நேரடிச் செயல்விளக்கம் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்.

கலந்துரையாடல் நிகழ்வு அட்டவணை:

24.09.2026, தூத்துக்குடி - சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.

27.09.2026, கள்ளக்குறிச்சி - கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்

30.09.2026, சிவகாசி - எஸ். பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி.

11.10.2026, திண்டுக்கல் - இ.எம். சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர்

14.10.2026, ராணிப்பேட்டை - ஏ. செல்லக்குமார், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்

18.10.2026, தஞ்சாவூர் - வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.

22.10.2026, விழுப்புரம் - எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி.

25.10.2026, திருப்பூர் - கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்

28.10.2026, புதுக்கோட்டை - சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்

01.11.2026, ஈரோடு - விஜய் வசந்த், எம்.பி.

நமது தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முழங்குவது போல, சாதிவாரிக் கணக்கெடுப்பு பெயரளவில் கண்துடைப்பாக நடத்தப்படக் கூடாது; அது நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும்! சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கும் மோடி அரசின் வஞ்சக சதியை ஒருபோதும் ஏற்க முடியாது. பின்தங்கிய மக்களின் உரிமைகளை முடக்கும் நோக்கிலான குறைபாடுள்ள வினாத்தாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏமாற்று வேலைகளை நிறுத்திவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட சாதிப் பட்டியலுடன் அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று சரியான வினாத்தாளை ஒன்றிய மோடி அரசு உடனே உருவாக்க வேண்டும்! சாதிவாரிக் கணக்கெடுப்பு - வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT