தமிழக செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஒருவர் தனது பைக்கில் கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, அந்த வியாபாரியின் பைக் மீது மோதியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, அகிலாண்டபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசீர்வாதம் என்பவரின் மகன் பால்ராஜ் (வயது 62). மாட்டு வியாபாரியான இவர், நேற்று மாலையில் கயத்தாறில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடம்பூர் சாலை வழியாக சொந்த ஊரான சத்திரப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் கடம்பூர் சாலையில் உள்ள சோசியர் மடம் வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே கடம்பூரில் இருந்து கயத்தாறு நோக்கி அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக பால்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த அதிவேக மோதலில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த பால்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த பால்ராஜை உடனடியாக மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பால்ராஜிற்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பால்ராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான, கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.