சென்னை,
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி ஆற்றில் புதிய அணைகள் கட்ட முயலும் கர்நாடக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் இந்த முயற்சி, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி ஒருதலைப்பட்சமாக அணைகட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது.
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.