தமிழக செய்திகள்

காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கூட்ட வேண்டும் - திருமாவளவன்

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.

மதுரை,

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. ஆனால், அந்த முறையீட்டை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உத்தவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.

அதேவேளை, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

திருமாவளவன் வலியுறுத்தல்

இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது,

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். குறுவை சாகுபடியை பாதுகாக்க மத்திய அரசு மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு முன் தமிழக அரசு தனது வாதத்தை முன்வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்

என்றார்.