சென்னை,
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக.
திமுகவின் விவசாயிகள் அணி செயலாளர் விஜயன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த ஜூலை 28ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கியதும், ஜூலை 30ஆம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், ஜூலை 29 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ்தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின்அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் .
வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியைநிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் டெல்லியில் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.