தமிழக செய்திகள்

காவிரி விவகாரம்: மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெற வேண்டும் - சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஆகஸ்ட் 2ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அளித்துள்ள பதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றம்

காவிரி பாசன உரிமையை பாதுகாக்கவும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் போராட வேண்டிய நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இத்தகைய கேள்வியை பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

பன்மாநில நதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் தன்னிச்சையாக மேல் பகுதி பாசன பகுதியினர் முடிவெடுக்கக்கூடாது என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறை. இதை அறியாதவரல்ல மத்திய இணைய மந்திரி. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக நடந்து கொள்வதன் தொடர்ச்சியே விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பாராளுமன்றத்தில் அளித்துள்ள பதில் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.

மேகதாது அணை

நடுவர்மன்ற தீர்ப்பு, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு இதுவரை வழங்கியதில்லை. மாறாக, அபரிமிதமான மழை பெய்து உபரி நீரை திறந்து விடும் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டினால், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாகும் ஆபத்தை மறுக்க முடியாது. இதனால் குடிதண்ணீர் மற்றும் பாசனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். காவிரி நடுவர் மன்ற உத்தரவின் அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதையும் குறிப்பாக, நீர்ப்பங்கீட்டு அளவுகுறித்தே கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலித்து தீர்ப்பு வழங்கியது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

எனவே, மத்திய இணைய மந்திரி பாராளுமன்றத்தில் நதிநீர் பிரச்சனைகள் தொடர்பாக தெரிவித்துள்ள பதிலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட கீழ் பகுதி பாசன மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் மத்திய பாஜக அரசின் போக்கைக்கண்டித்தும் 2026 ஆகஸ்ட் 2-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.