சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட அடிப்படையில், இந்த நீர் முறையாக மாதவாரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், காவிரி தொடர்பாக முன்னுக்கு வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் ஐம்பதாவது கூட்டம் ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பானவை. தற்பொழுது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில், இந்த கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது.
மேலும், 29-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தின் பொருள் என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இல்லாத சூழ்நிலையிலும், என்ன பொருள் என்பது முன்கூட்டி அறிவிக்கப்படாத நிலையிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகள் என்ன கருத்தை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்க முடியும். கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் அரசின் ஆலோசனையை பெற்று கருத்துக்களை தெரிவிப்பதுதான் வழக்கம்.
எனவே, ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பொறுப்பேற்ற பிறகு தேதி நிச்சயித்து காவிரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.