திருச்சி,
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர், மாயனூர் கதவணையைத் தாண்டி இன்று காலை முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜூன் மாதம் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் சீறிப்பாய்ந்தது.
அணையில் இருந்து திறக்கப்பட்ட இந்தத் தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேரம் செல்லச் செல்ல படிப்படியாக அதிகரித்து 4,081 கன அடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வினாடிக்கு 2,050 கன அடி வீதம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாயனூரில் இருந்து சீறி வந்த காவிரி நீர், இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது புதிய தண்ணீரின் வரவால் அது 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமேஸ்வரன் கூறுகையில்,
"நேரம் செல்ல செல்ல முக்கொம்பு மேலணைக்கான நீர்வரத்தின் அளவு மேலும் சற்று உயர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் கிளை கால்வாய்களிலும் தண்ணீர் விரைவில் பாயும் என்பதால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் சுறுசுறுப்புடன் தொடங்கியுள்ளனர்.
தற்போது வரும் 1500 கன அடி நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை கல்லணைக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் கல்ல ணையில் இருந்து தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.