தமிழக செய்திகள்

பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி உபரிநீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வு

தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவித்தது.

பிலிகுண்டுலு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களுக்கான நீர் பாசன தேவையை பூர்த்தி செய்ய கூடிய முக்கிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை உள்ளது. இந்த அணையில், 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம்போல் கர்நாடகம் மறுத்து விட்டது.

பரவலாக மழை

இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது.

இந்த சூழலில், தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.

கபினி அணை

நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.

இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று வந்தடைந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பின்னர் அது குறைக்கப்பட்டு, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவித்தது.

இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.

ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.