தருமபுரி,
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராகக் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (சனிக்கிழமை) நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பரிசல் இயக்கவும், குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளில் குளிக்கவும் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
விடுமுறை தினமான சனிக்கிழமை, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்புப் பணியில் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.