தமிழக செய்திகள்

சிபிஐ, வருமான வரி வழக்கு... உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதில்

தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சால் அவையில் நேற்று சிரிப்பலை ஏற்பட்டது.

சென்னை,

ரிலாக்சா இருக்கிறீர்கள்

நேற்றைய சட்டசபையில் விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசும்போது, 'நாங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது ஒரு பதற்றம் இருக்கும். முதல்-அமைச்சராக இருந்த கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ உடனே எங்களை தொடர்பு கொண்டு அதில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். அப்படி 5 ஆண்டுகாலமும் டென்ஷனிலேயே இருப்போம். நீங்கள் (புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள்) எல்லாம் ரிலாக்சா இருக்கிறீர்கள்' என்றார்.

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'சின்ன வாய்க்கால் பிரச்சினைக்குகூட எங்களை தொடர்பு கொண்டு சரிசெய்து விட்டீர்களா? என்று கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் எங்கள் முதல்-அமைச்சர் இருக்கிறார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனோடு தான் இருக்கிறோம். சின்ன விஷயமாக இருந்தாலும் பயத்தோடு அதை அணுகுகிறோம்' என்றார்.

சிபிஐ வழக்கு

இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்" என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நேற்று எங்கள் உறுப்பினர் பேசும்போது கடந்த 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என்று. அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நாங்களும் தினமும் நிம்மதியாக உறங்க முடியவில்லை; ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகதான் இருக்கிறோம் என்றார். மீண்டும் அதை திருப்பி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது; வருமான வரி வழக்கும் இருக்கிறது என்று கூறினார்.

வேறு எந்த அர்த்தமும் இல்லை

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், "சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் சரிதான். எங்களுடைய டென்ஷன், எங்களுடைய முதல்-அமைச்சர் தொகுதியில் மக்கள் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறதா? என கேட்பார் என்பதைதான் நேற்று குறிப்பிட்டேனே தவிர; வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. எங்களை பயமுறுத்தியோ, டென்ஷனாகவோ குறிப்பிடவில்லை.

எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது நமது முதல்-அமைச்சர் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது; தொகுதியில் எதாவது ஒரு சிறிய பிரச்சினை இருந்தால் கூட ஏன் சரிசெய்யவில்லை என கேட்கும் முதல்-அமைச்சர் தான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பதிலளித்தார்.

அதே எண்ணத்தில்தான் எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இவ்வாறு இருவரிடையே விவாதம் நடந்தது.