தமிழக செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்கியது சிபிஐ

சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.

சென்னை,

கரூர் சம்பவம்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. கையில் எடுத்துள்ளது. வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

விஜய்யிடம் விசாரணை

இது தொடர்பாக பல கட்ட விசாரணையை இதற்கு முன்பு முடித்திருக்கிறது. சம்பவம், த.வெ.க. தலைவர் விஜய்யின் முன்னிலையில் நடந்தது என்பதால் அவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். இதன் பேரில் விஜய் கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக மீண்டும் அவரை அழைத்தனர்.

கடந்த மார்ச்ச 10-ந் தேதி அவர் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் சூழ்நிலையை காரணம் காட்டி அவர் மறுதேதி கோரினார். இதன் அடிப்படையில் 15-ந் தேதி விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.

மீண்டும் சிபிஐ விசாரணை

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது. சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உட்பட்ட 10 காவலர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் தாந்தோன்றிமலை அருகில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் சையது அலி மற்றும் ஒரு சில காவலர்கள் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.