புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் நடைபெற்றது. அதாவது விடைத்தாள்களை 'ஸ்கேன்' செய்து அதை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் அதை கம்ப்யூட்டர் திரையிலேயே பார்த்து விடைகளை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குவார்கள்.
இதனையடுத்து மறுமதிப்பீடு செய்வதற்கு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு மாணவனின் விடைத்தாளில் முதல் பக்கம் அவன் எழுதிய விடைத்தாளும், மற்ற பக்கங்கள் வேறொரு மாணவனின் விடைத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளதை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவனே கண்டுபிடித்துவிட்டார். டிஜிட்டல் விடைத்தாள்கள் படிக்கமுடியாத அளவுக்கு மங்கலாக இருந்ததாக மாணவர்களும் புகார் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், சி.பி.எஸ்.இ. இணையதளம் 'ஹேக்கிங்' செய்யப்பட்டது, ஆன்லைன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் திருத்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் டெண்டரிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையிலேயே சி.பி.எஸ்.இ. கல்வி வாரிய தலைவர், செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. இறுதித்தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 2 முதல் 7-ந்தேதி வரை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்வதற்கான இணையதளம் செயல்பாட்டில் இருந்த நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் சில நாட்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என்று கோரி இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, நீதிபதி மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விடைத்தாள் மறுமதிப்பீடு விண்ணப்பத்திற்கான இணையதளத்தை திறப்பதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கினால், தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும். பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தனிப்பட்ட முறையில் கோர்ட்டை அணுகலாம். இது குறித்து வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.