சென்னை,
சென்னை தேனாம்பேட்டை போலீஸ்காரர் தர்மன்(வயது 37) தனது தாயார் ஈமச்சடங்கிற்காக கடந்த 21-ந்தேதி விடுமுறை கேட்டார். ஆனால் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விடுமுறை தர மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீஸ்காரர் தர்மன் வயர்லெஸ் கருவி மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் குடிபோதையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் ஆஜராகததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் போலீஸ்காரர் தர்மன் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார். அவர் அளித்த தன்னிலை விளக்கத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
அதாவது, சம்பவத்தன்று வயர்லெசில் பேசிய பின்னர் தான் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை வழியாக சென்ற போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சாலையில் திடீரென்று என்னை மடக்கினார்.
அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தேன். பின்னர் என்னை ரோந்து வாகனத்தில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும், சில போலீசாரும் அழைத்து சென்றனர். நான் மயக்கமாக இருந்த நேரத்தில் வாயில் வலுக்கட்டாயமாக மதுபானத்தை ஊற்றி இருக்கின்றனர். பின்னர் நான் மதுபோதையில் இருந்ததாக ஆஸ்பத்திரியில் சான்றிதழ் பெற்றுவிட்டனர் என்று புகார் தெரிவித்தார்.
போலீஸ்காரர் தர்மன் கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பது குறித்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸ்காரர் தர்மனை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் திடீரென்று வழிமறிப்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுவதும், பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இவர் ஆயுதப்படையில் இருந்து தான் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டர் ஆனார். இங்கு நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். இவர் மீது ஏற்கனவே ஏராளமான புகார் எழுந்தன. தற்போது சி.சி.டி.வி. கேமராவால் சிக்கி விட்டார். மீண்டும் ஆயுதப்படைக்கே மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ்காரர் தர்மன் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை திரும்ப பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.