தமிழக செய்திகள்

சேலம் மத்திய சிறையில் செல்போன்,சார்ஜர் பறிமுதல்: இருவர் மீது வழக்குப்பதிவு

கருப்புசாமி, ஹேமநாதன் ஆகியோரின் அறைகளில் பயன்படுத்திவந்த செல்போன் மற்றுன் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், செல்போன்களை ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிறை அதிகாரிகள், சிறப்பு சோதனை குழுவினர் அவ்வப்போது கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தி செல்போன், சார்ஜர், சிம்கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சேலம் மத்திய சிறையின் 9-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சென்னை கஞ்சா வழக்கு கைதிகளான கருப்புசாமி, ஹேமநாதன் ஆகியோரின் அறைகளில் சிறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த கைதிகள் பயன்படுத்தி வந்த செல்போன், சார்ஜர் சிக்கின. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சோழவரம், மீஞ்சூர் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக சென்று வந்தபோது செல்போன், சார்ஜரை கடத்தி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த செல்போன், சார்ஜர் பறிமுதல் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் ஜெயிலர் சிவானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்கும் நிலையிலேயே இந்த வழக்கிலும் கைது செய்து மேல்நடவடிக்கை எடுத்துள்ளனர்.