சென்னை,
இந்தியாவில் செல்போன் விற்பனையில் சுமார் 60 சதவீதம் ஆப்லைன் கடைகள் மூலம் நடைபெறுகிறது. ஆன்லைன் மற் றும் ஆப்லைன் விற்பனைகளை ஒருங்கிணைத்து பார்க்கும் போது, கடந்த மே மாதத்தில் செல்போன் போன் ஷிப்மெண்ட் 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதேபோக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் செல்போன் அனுப்பி வைப்பு 3 சதவீதம் மட்டுமே குறைந்திருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 15 சதவீதத்துக்கும் அதிகமான சரிவு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெமரி சிப் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலை உயர்வால், கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல செல்போன் நிறுவனங்கள் மாதந்தோறும் விலையை உயர்த்தி வருகின்றன.
இதன் தாக்கம் விற்பனையில் பிரதிபலித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் சராசரி விலை ஜனவரி முதல் மே வரை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சில மாடல்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விற்பனை சரிவுக்கு கடுமையான வெப்பநிலை, பலவீனமான நுகர்வோர் தேவை, பொருளாதார அழுத்தங்கள் மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான விளம்பர சலுகைகள் ஆகியவையும் காரணமாக இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், செல்போன்களுடன் சார்ஜர்களை இலவசமாக வழங்குவதை நிறுத்துவது குறித்து விற்பனையாளர்கள் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை தற்போதைய 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான விலை கொண்ட செல்போன்களுக்கு தனி வரிச்சலுகை வழங்க வேண்டும் என்றும் விற்பனையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.