தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு பெண் உறுப்பினரிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜாமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் ரோகிணி (வயது 35). இவர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்து வருகிறார். நேற்று ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் அருகே நின்றுகொண்டு, தனது தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணியின் தம்பி, உடனடியாக அந்த நபரை துரத்திச் சென்றார். எனினும், அந்த நபர் அப்பகுதியில் உள்ள தெருக்களுக்குள் ஓடி மறைந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
பறிபோன செல்போனின் மதிப்பு ரூ.10 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரோகிணி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த செல்போன் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.