தமிழக செய்திகள்

நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரை வழிமறித்து, அவரது கையிலிருந்த ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி போல்டன்புரம் 2-வது தெருவைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் ராகுல் (வயது 24). இவர் தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. சாலையில் உள்ள கண் கண்ணாடி விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் நேற்று இரவு தனது நிறுவனத்தின் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, வழக்கம்போல் தேவர்புரம் சாலை வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இரவு நேரத்தில் அவர் தேவர்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர், ராகுலை திடீரென நெருங்கி, அவர் தனது கையில் வைத்திருந்த ரூ.21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல், உடனடியாக மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.