தமிழக செய்திகள்

பயிர் கடன் தள்ளுபடியில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் செல்லூர் ராஜூ பேச்சு

பயிர் கடன் தள்ளுபடியில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

சென்னை,

அ.தி.மு.க. உறுப்பினர் காமராஜ் (நன்னிலம்):- 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த டெண்டர் ஒன்றில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி சம்பந்தப்பட்டிருப்பதாகவும் உணவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டி பேசினார். பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை உடனடியாக ஏலம் விட்டுவிட முடியாது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட கமிட்டி உள்ளது. போர்டு உள்ளது. அந்த போர்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அந்த போர்டு கூடி மார்க்கெட் விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுக்க முடியாது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருந்தால் விசாரியுங்கள். தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.

அமைச்சர் சக்கரபாணி:- பருப்பு, எண்ணெய் டெண்டர் பற்றி சொன்னார். மே மாதம் நடந்த டெண்டரில் கடந்த காலத்தில் என்ன இருந்ததோ அதே அளவுதான் டெண்டர் போட்டனர். அதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மறுபடியும் டெண்டர் விடப்பட்டது. பருப்பு விலை ரூ.120-க்கு அன்றைக்கு டெண்டரில் குறிப்பிட்டிருந்தனர். இன்று தி.மு.க. ஆட்சியில் ரூ.76-க்கு வாங்கியதால் அரசுக்கு ரூ.75 கோடி லாபம். அதேபோன்று பாமாயிலில் ரூ.5 கோடி லாபம் கிடைத்துள்ளது. மொத்தத்தில், அரசுக்கு ரூ.80 கோடி லாபம் கிடைத்துள்ளது.

நடவடிக்கை

அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டரில் கலந்து கொண்டவர் வெறும் 3 பேர் தான். இன்று டெண்டர் எளிமையாக்கப்பட்டு 20 பேர் டெண்டரில் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் ரூ.100 கோடிக்கு குடோன் கட்டியுள்ளனர். கஜா புயலின் போது குடோன் பக்கத்தில் ஒரு செடி கூட ஆடவில்லை. வேறெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த குடோன் மட்டும் சேதமடைந்துள்ளது. அதற்கு ரூ.60 கோடி செலவழித்திருக்கிறீர்கள். இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ராணிப்பேட்டையில் நடந்த நெல் கொள்முதல் நிலையத்தில் என்னென்ன தவறு நடந்ததெல்லாம் குறித்து இன்று சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளோம். எனவே இந்த துறையில் கடந்த காலத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்போம்.

தள்ளுபடி அறிவிப்பு

அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ (மதுரை):- பயிர் கடனில் நடந்த முறைகேடுகளை கூட்டுறவு துறை அமைச்சர் இங்கே சொன்னார். இந்த முறைகேடுகளை நாங்கள் நடத்துவதற்கு எங்கள் ஆட்சியில் அனுமதிக்கவில்லை. 2016-2021-ல் பயிர் கடன் தள்ளுபடி செய்ய, எப்படி எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து வரைமுறை கொடுத்துள்ளோம். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது.

எப்படிப்பட்டவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அரசு துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் அதில் ஈடுபட வேண்டும் என்றும் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். அதனால் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

செல்லூர் ராஜூக்குத்தான் ரகசியம் தெரியும்

அமைச்சர் ஐ.பெரியசாமி:- பயிர் கடன் தள்ளுபடி செய்வது குறித்து மே 5-ந் தேதி முடிவெடுத்து 8-ந் தேதி பதிவாளர் அரசாணை போட்டதாக சொன்னார். இவ்வளவு நேரத்துக்குள் மொத்தம் 16 லட்சம் பேர் கடன் தள்ளுபடி செய்ய தகுதியுடையவர்கள் என்ற பட்டியலை எடுத்து விட்டனர். அவ்வளவு சீக்கிரமாக குறுகிய காலத்துக்குள் எப்படி தயார் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

இந்த ரகசியம் செல்லுர் ராஜூவுக்குதான் தெரியும். எனக்கு தெரியாது. அவசரமாக அள்ளி தெளித்துள்ளனர். ஒரு கடன் சங்கத்தில் அதிகபட்சமாக ரூ.4 கோடி வரை கடன் தள்ளுபடி செய்யலாம். ஆனால் ஒரு சங்கத்தில் ரூ.10 கோடி வரை கடன் தள்ளுபடி செய்துள்ளனர். இப்படி செய்தால் சாதாரண விவசாயி எங்கே போவான். கடன் தள்ளுபடி செய்வதற்கு ஒரு அளவு வேண்டாமா?. இது சாதாரண பணம் அல்ல. மக்களின் வரிப்பணம். ஏழைகளுக்கு போக வேண்டிய பணம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் வரக்கூடாது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பது ஒரு பொது நீதியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.