சென்னை,
பள்ளி வேலை நேரம் தவிர்த்து, காலை மற்றும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதன்படி, வரும் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எந்த ஆசிரியர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த பணிகளால் பள்ளி வகுப்புகள் எதுவும் பாதிக்கப்படக் கூடாது எனவும், பள்ளி வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் அனைவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.