தமிழக செய்திகள்

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது: திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல, ஆனால் திணிப்பை எதிர்ப்போம் என்று திருச்சி சிவா கூறினார்.

சென்னை,

திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தங்களுடைய பலத்தினால் பல்வேறு யுக்திகளினால் ஆக்கிரமித்த பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டிலும் கால் வைக்க முயற்சி செய்கிறது. அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழு மூச்சுடன் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது அதீதமான நம்பிக்கை அல்ல, தன்னம்பிக்கை.

நம்மிடமிருந்து பணம் வாங்கி மத்திய அரசு இன்னொரு பகுதியை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் மாநிலங்கள் ஏற்கனவே 50 விழுக்காடு தாருங்கள் என்று கேட்கிற போது, அந்த 41-ஐ கூட முழுமையாக தர மறுக்கிறார்கள். மத்திய அரசின் வருமானம் 100 ரூபாய் என்றால், தமிழ்நாடு தருவது 9 ரூபாய் நமக்கு அவர்கள் தருவது 4 ரூபாய் அதே நேரத்தில் உத்தர பிரதேசம் தருவது 8 ரூபாய் அவர்களுக்கு தருவது 16 ரூபாய் பீகார் தருவது 2.8 ரூபாய் திருப்பி தருவது 10 ரூபாய். உத்தர பிரதேசத்திற்கு இரண்டு மடங்கு பீகாருக்கு ஐந்து மடங்கு தமிழ்நாட்டுக்கு பாதிதான். இந்த ஓரவஞ்சனை என்று கேட்கிற உரிமை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டை ஒரு மாநிலம் என்று பார்க்க வேண்டி மத்திய அரசாங்கம் ஒருதலைப் பட்சத்தோடு பார்க்கிறது.நீங்கள் சொல்லுகிற 'டபுள் என்ஜின்' ஆட்சிதான் மராட்டியத்திலும் இருக்கிறது. உங்களுக்கு எல்லா சலுகைகளும் தருகிறார்கள், ஆனால் நீங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டின் தேர்தல் உச்சக்கட்ட நேரத்தில் இருக்கும்போது, நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியல் சட்ட திருத்தம் என்ற பெயரால் வரவழைக்கிறார்கள். அதில் வாக்களித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தில் நாங்கள் செல்ல இருக்கின்றோம். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை, தொன்மையான தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு இந்தியை முன்னிறுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல, ஆனால் திணிப்பை எதிர்ப்போம். மாநில உரிமைகளுக்காக போராடுவோம், அதே சமயம் நாட்டின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிராக இருந்ததில்லை. தமிழ்நாட்டின் கடன் வரம்பிற்குள்ளேயே இருக்கிறது. தமிழ்நாடு எல்லா தடைகளையும் தாண்டி முன்னேறி வருகிறது” என்றார்.