தமிழக செய்திகள்

கொப்பரை, தோதாபுரி மாம்பழ கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் - நயினார் நாகேந்திரன் நன்றி

மத்திய அரசின் இந்த முன்னெடுப்பால், தமிழக கிராமப்புறங்களின் பொருளாதாரம் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,545 என்ற விலையில் 96,879 டன் தோதாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ. 1,049 கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சவுகான் சிவராஜ்-க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயமான விலை

சந்தையில் ஏற்பட்ட மாம்பழ விலை வீழ்ச்சியால், டன் கணக்கான மாம்பழங்களை குப்பையில் கொட்டி வந்த தமிழக விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்துள்ள நமது மத்திய அரசின் இந்த முன்னெடுப்பால், தமிழக கிராமப்புறங்களின் பொருளாதாரம் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், தமிழக விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.